தமிழக வெற்றி கழகம் வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கட்சியின் முதல் முக்கிய நடவடிக்கையாக வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடத் தலைமை திட்டமிட்டுள்ளதோடு, இதற்கான வரைவுப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. முதற்கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பேர் கொண்ட உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 80 விழுக்காடு இடங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் தொகுதியில் களம் காண அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் நிறைந்த இந்தத் தொகுதி விஜய்யின் வெற்றிக்குச் சாதகமாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தவிர வில்லிவாக்கம், ஆலங்குளம் மற்றும் வாசுதேவநல்லூர் போன்ற தொகுதிகளிலும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் வாரிசுகள் களம் இறக்கப்பட உள்ளனர்.
விஜய்யின் நேரடிப் போட்டி குறித்த இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் அது தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
