இந்திய துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜகதீப் தன்கர் தனது பதவியை கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். அவரது உடல்நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின் துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதில்  மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்து  துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர். அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் அதே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.