
தெலுங்கானா மாநிலம் எல்லா ரெட்டி கூடம் கிராமத்தில் வீடுகள் மற்றும் கோவிலை சந்தேகப்படும்படி நோட்டமிட்டு சென்ற வாலிபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் திருட வந்ததாக நினைத்து ஊர் மக்கள் வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். அப்போது அந்த வாலிபர் எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள், ஆனால் என்னால் பசி தாங்க முடியாது சாப்பாடு தாருங்கள் என கூறினார்.
இதை கேட்ட மக்கள் உடனடியாக அடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்த புளியோதரையை கொண்டு வந்து திருடனுக்கு ஊட்டி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ் என்பதும், யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷை கைது செய்தனர். மேலும் வாலிபரை கட்டி வைத்து அவருக்கு உணவு ஊட்டி விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.