சூன் 10 கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

671 – சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார்.

1190 – மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார்.

1329 – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

1523 – டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், கோபனாவன் நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன.

1782 – சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார்.

1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.

1793 – பிரெஞ்சுப் புரட்சி: கிரோந்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாக்கோபியர் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை நிறுவினர்.

1801 – சிவகங்கையின் சின்னமருது ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும் என்ற தனது விடுதலைப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.

1829 – இலண்டன் தேம்சு ஆற்றில் முதலாவது படகோட்டப் போட்டி ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.

1838 – நியூ சவுத் வேல்சில் (இன்றைய ஆத்திரேலியாவில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேயக் குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் ஒன்றியப் படைகளைத் தோற்கடித்தன.

1868 – செர்பியாவின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.

1871 – கொரியாவின் கங்குவா தீவில் 109 அமெரிக்கக் கடற்படையினர் மெக்லேன் டில்ட்டன் தலைமையில் தாக்குதல் நடத்தினர்.

1886 – நியூசிலாந்தில் டரவேரா எரிமலை வெடித்ததில் 153 பேர் உயிரிழந்தனர்.

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.

1916 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.

1918 – ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் சென்ட் குரோவாசியக் கரைக்கப்பால் இத்தாலிய படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நின்ற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது.

1935 – 1932 முதல் போரில் ஈடுபட்டு வந்த பொலிவியாவும் பரகுவையும் போரை நிறுத்த உடன்பட்டன.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் செக் குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர்.

1945 – ஆத்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.

1956 – இலங்கை இனப்பிரச்சினை: இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1957 – கனடாவில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.

1967 – இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு நாள் போர் முடிவுக்கு வந்தது.

1982 – சிரிய அரபு இராணுவம் லெபமானில் இசுரேலியப் படையினரை தோற்கடித்தனர்.

1984 – தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.

1986 – மண்டைதீவுக் கடல் படுகொலைகள்: யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 – இலங்கை இராணுவத்துக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.

1991 – 11-வயது ஜேசி டுகார்ட் என்ற சிறுமி கலிபோர்னியாவில் கடத்தப்பட்டாள், இவள் 2009 வரை விடுவிக்கப்படவில்லை.

1996 – வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1997 – கெமர் ரூச் தலைவர் போல் போட் வடக்குக்குத் தப்பியோட முன்னர், தனது பாதுகாப்புத் துறைத் தலைவர் சோன் சென், மற்றும் அவரது 10 குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்வதற்கு உத்தரவிட்டார்.

1998 – முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.

1999 – கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.

2002 – இரண்டு மனிதர்களின் நரம்பு மண்டலங்களுக்கு இடையில் முதல் நேரடி மின்னணுத் தொடர்புப் பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் கெவின் வாரிக் என்பவரால் நடத்தப்பட்டது.

2003 – நாசாவின் இசுபிரிட் தளவுலவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

2006 – ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.

2017 – உலக எக்ஸ்போ கண்காட்சி கசக்கஸ்தான், அஸ்தானா நகரில் ஆரம்பமானது.

இன்றைய தின பிறப்புகள்

940 – அபுல் வபா, பாரசீகக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 998)

1832 – எட்வின் அர்னால்டு, ஆங்கிலேயக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1904)

1832 – நிக்கோலஸ் ஓட்டோ, செருமானியப் பொறியியலாளர் (இ. 1891)

1912 – பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், தென்னிந்திய மிருதங்க இசைக் கலைஞர் (இ. 1981)

1921 – எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப், (இ. 2021)

1922 – ஜூடி கார்லேண்ட், அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 1969)

1925 – வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி (இ. 2013)

1935 – சரோஜ் நாராயணசுவாமி, இந்தியத் தமிழ் வானொலி ஒலிபரப்பாளர் (இ. 2022)

1959 – கார்லோ அன்செலாட்டி, இத்தாலியக் கால்பந்து வீரர்

1960 – நந்தமூரி பாலகிருஷ்ணா, இந்திய நடிகர், அரசியல்வாதி

1962 – செல்வம் அடைக்கலநாதன், இலங்கை அரசியல்வாதி, ஈழப்போராளி

1971 – பாபி ஜிண்டல், அமெரிக்க அரசியல்வாதி

1972 – சுந்தர் பிச்சை, இந்திய-அமெரிக்க கணினி தொழில்நுட்ப மேலாளர்

இன்றைய தின இறப்புகள்

கிமு 323 – பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனியப் பேரரசர் (பி. கிமு 356)

1580 – லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (பி. 1524)

1836 – ஆந்த்ரே-மாரி ஆம்பியர், பிரான்சிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1775)

1926 – அந்தோனி கோடி, குவெல் பூங்காவை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞர் (பி. 1852)

1967 – ஸ்பென்சர் ட்ரேசி, அமெரிக்க நடிகர் (பி. 1900)

2003 – கே. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி, இதழாளர், எழுத்தாளர் (பி. 1918)

2004 – ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1930)

2008 – சிங்கிஸ் ஐத்மாத்தவ், கிர்கித்தானிய எழுத்தாளர் (பி. 1928)

2016 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்கப் பாடகி (பி. 1994)

2019 – கிரேசி மோகன், தென்னிந்திய நடிகர், நாடகாசிரியர் (பி. 1949)

2019 – கிரிஷ் கர்னாட், கன்னட நடிகர், எழுத்தாளர் (பி. 1938)

இன்றைய தின சிறப்பு நாள்

அடிமை ஒழிப்பு நாள் (பிரெஞ்சு கயானா)

படைத்துறையினரின் நாள் (ஜோர்தான்)