
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,431 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2.30 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 950 க்கும் அதிகமான அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் மாணவர் சேர்க்கை, பள்ளி நிர்வாகப் பணிகள், பெற்றோர் ஆசிரியர் கழக மேலாண்மை குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள், பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அரசு நிதி உதவி ஆவணங்கள் தயார் செய்தல் போன்ற பணிகள் தலைமை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. முக்கியமாக நிதி எடுப்பதில் பல சிரமங்கள் உள்ளன தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் ஒவ்வொரு முறையும் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டி உள்ளது.
இதனால் ஒவ்வொரு பணியும் மிகவும் பாதிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் இல்லாமல் இருப்பது பள்ளியின் நிர்வாகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே நீதிமன்ற நிலுவை வழக்குகளை முடித்து விரிவாக தலைமை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இதில் அவர்கள் கூறியதாவது, தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்து பட்டியலும் தயார் செய்துள்ளது.
ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் இருந்து முதுநிலை ஆசிரியர்களாக உயர்வு பெற்றவர்கள், நேரடியாக முதுநிலை ஆசிரியர்களாக உயர்வு பெற்றவர்கள் என இரு பிரிவினர் கிடையே முன்னுரிமை பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக சில முதுநிலை ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் கலந்தாய்வு நடைபெறுவது சற்று காலதாமதம் ஏற்படுகிறது. இந்த வழக்குகளை விரைவில் சரி செய்து இம்மாதம் பதவி உயர்வு கலந்தாய்வு நிச்சயம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.