உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த போரை தொடங்கிய ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு அந்நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும் ஆயுதங்களை வழங்கியும் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இதில் சவுதி அரேபியா நாடு உக்ரைனுக்கு தனது ஆதரவை தெரிவித்தது.

இதற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதனை அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்தார். மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சவுதி அரேபிய நாட்டின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத் அவர்கள் உக்ரைன் விரைந்துள்ளார். அங்கு அவர் கீவ் நகரில் வைத்து அதிபர் ஜெலென்ஸ்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் உக்ரைனுக்கு தேவையான மனிதாபிமான மற்றும் பெட்ரோலிய எண்ணெய் வழங்குவதற்கான நிதி உதவி செய்யும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் உக்ரைன் வெளியுறவு மந்திரி ஆண்ட்ரீய் எர்மேக் மற்றும் சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத் ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் உக்ரைனுக்கு 40 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவியை சவுதி அரேபியா சார்பில் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.