பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்காமல், அவர்களைப் பனையூரில் உள்ள தனது இடத்திற்கு வரவழைத்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்தச் சம்பவம், குறித்து தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) பின்னணியுடன் த.வெ.க.வின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் திட்டமிட்டுப் பரப்பப்படும் ஒரு ‘பிரமோஷன் பணி ஒன்று நடந்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தின் உச்சக்கட்டமாக, ஒரே மாதிரியான வாசகங்களுடன் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது, இக்குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாக உள்ளது. “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் வர வைத்த விஜயின் கேவலமான செயலால் நான் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். நன்றி @TVKVijayHQ” என்ற ஒரே மாதிரியான வசனத்தை, 30-க்கும் மேற்பட்டோர் பதிவிட்டுள்ள ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த ‘விலகல்’ பதிவுகள், ஒரு குறிப்பிட்ட கட்சியின் திட்டமிட்ட பிரசார உத்தி மற்றும் பணம் கொடுத்துப் பேச வைக்கும் குழுக்களின் செயல்பாடு குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஒரே கருத்தை, ஒரே வசனத்தில் பலரும் திரும்பத் திரும்பப் பதிவிடுவது, இத்தகைய விளம்பர வேலைகளை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்து, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் வர வைத்த விஜயின் கேவலமான செயலால் நான் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். நன்றி @TVKVijayHQ
— Jagadish (@scbjagadish) October 27, 2025
