கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அவர், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நேரடியாக தொடர்பு கொண்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களையும் போர்கால அடிப்படையில் ஈடுபடுத்தியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதோடு, நிலைமையை விரைவில் சீராக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் அதிகாரி ADGP-யிடமும் பேசியுள்ளார். பொதுமக்கள், மருத்துவர்களுக்கும் காவல்துறைக்கும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும், அதுவே உயிர்களை காப்பாற்றும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.