துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 4.20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி சிரியாவின் எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா, லெபனான், இஸ்ரேல் உட்பட அண்டை நாடுகளிலும் இது உணரப்பட்டுள்ளது.

இதுதான் நூறாண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும். அதாவது அதிகாலை நேரம் வீடுகளில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். குறிப்பாக துருக்கி நாட்டினுடைய காஜியான்டெப், அடானா மாலத்யா, கிளிஸ் ஆகிய நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து கிடக்கின்றன.

சுமார் 1500க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகின்றது. பார்க்கும் திசையெல்லாம் கட்டிட குவியலாகவே காட்சி அளிக்கின்றது. இந்த கட்டிட குவியலுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து வெறும் கையாலேயே இடிபாடுகளை அகற்றி அதனுள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் மருத்துவமனைகளும் அடங்கும். அதனால் மீட்கப்படுபவர்களுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணி நடக்கும் இடங்களில் பனிப்பொழிவும் மழை பொழிவும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பேரழிவை ஏற்படுத்தியது. சிரியாவின் வடக்கு பகுதிகள் துருக்கியை ஒட்டி இருப்பதால் நிலநடுக்கத்தால் உருகுலைந்தது.
அங்கு கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நகரங்கள் அடையாளம் தெரியாமல் போனது. அதிலும் குறிப்பாக கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த ஜான்டரீஸ் நகரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. அதேபோல் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த அலப்போ, லதாக்கியா போன்ற நகரங்களும் நிலைகுலைந்தது. இந்த இடங்களில் கட்டிட குவியலும் மரண ஓலமும் தான் கேட்கின்றது. இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இதுவரை 4000 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15,000க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.