அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அமோடி சகோதரர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கூகுள் மற்றும் எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக வளர்ந்து வந்தது.
இந்தச் சூழலில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகன் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகள் பயன்படுத்தி வந்த ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சேவைகளை உடனடியாக நிறுத்த அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது அந்த நிறுவனத்தின் கொள்கை முடிவாகும்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை ராணுவப் பயன்பாட்டிற்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகச் சரியல்ல என்று கூறி அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி அதனைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
தனியார் நிறுவனம் ஒன்று ராணுவத்தின் செயல்பாடுகளில் தலையிடுவதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ஆந்த்ரோபிக் நிறுவனத்துடன் இனி எந்த வணிகத் தொடர்பும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அந்த நிறுவனம் தேசியப் பாதுகாப்பு விநியோகச் சங்கிலிக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகப் பாதுகாப்புத் துறைச் செயலர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் அரசுத் துறைகள் அனைத்தும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அதிரடித் தடையால் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் போட்டியாளரான ஓபன் ஏஐ நிறுவனம் அந்த வாய்ப்புகளைக் கைப்பற்றத் தயாராகி வருகிறது. பென்டகன் அமைப்புடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஓபன் ஏஐ நிறுவனம் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. லாபத்தை விடப் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறித் தொடங்கப்பட்ட ஆந்த்ரோபிக் நிறுவனம், தனது கொள்கை முடிவால் தற்போது அமெரிக்க அரசின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
