உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், டன்ஸ் ஆற்றில் டிராக்டர் ஒன்று கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16, 2025) நடந்த இந்த துயர சம்பவம் காமிராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய டிராக்டரில் இருந்த 10 தொழிலாளர்கள் உதவி கேட்டு கதறிய காட்சிகள் வீடியோவில் தெரிகின்றன. ஆற்றங்கரையில் நின்றவர்கள் மீட்பதற்கு முயன்றபோதும், வெள்ளத்தின் வேகத்தால் டிராக்டர் கவிழ்ந்து, அதிலிருந்தவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் கல் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது, ஆனால் அவர்கள் ஆற்றில் எவ்வாறு சிக்கினர் என்பது தெளிவாகவில்லை.

கனமழையால் டேராடூனில் சாலைகள், வீடுகள், கடைகள் சேதமடைந்தன, மேலும் ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. டேராடூனின் சஹஸ்ரதாரா, மால் தேவதா மற்றும் முசோரி பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை செயலாளர் வினோத் குமார் சுமன் தெரிவித்தார்.

முசோரியில் ஒருவர் உயிரிழந்ததாகவும், டேராடூனில் இரண்டு முதல் மூன்று பேர் காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், டப்கேஸ்வர் மகாதேவ் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது, ஆனால் கருவறை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) பவுண்டா பகுதியில் உள்ள தேவ்பூமி இன்ஸ்டிடியூட் வளாகத்தில் சிக்கியிருந்த 200 மாணவர்களை பத்திரமாக மீட்டனர். முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.