தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனையடுத்து இரவு 10 மணிக்கு வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கபட்டனர்.

நேற்று காலை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து காலை 11.30 மணிக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். அங்கு விட்டு விட்டு சாரல் மழையும், குளிர் காற்றும் வீசியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.