
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டாம். அந்த முடிவை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, மாணவியுடைய பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளது திமுக அரசு.
குறைந்தபட்ச விதிமுறைகளை கூட காவல்துறையினர் பின்பற்றவில்லை. இவர்களது அலட்சியத்தை கண்டிக்கும் விதமாகவும், மக்கள் நலனையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தவறிய திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சகோதரர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடு பட இருப்பதோடு, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலனி அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பல்வேறு விதமான பிரச்சனைகள் வருகின்றது.
திமுகவில் இருப்பதால் குற்றம் செய்கிறார்களா? அல்லது குற்றம் செய்வதற்காக திமுகவில் இருக்கின்றார்களா? என்ற அளவிற்கு உள்ளது. இதற்கு திமுக அரசும், முதல்வரும் தான் தலை குனிய வேண்டும். மக்கள் பக்கம் நின்று மக்களாகவே தொடர்ந்து போராடிவரும் நாம், நம்மையே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் முடிவை சகோதரர் அண்ணாமலை கைவிட வேண்டும். அதோடு மக்கள் விரோத திமுக ஆட்சியை அடியோடு துடைத்தெரிந்திட மக்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து போராட்டத்தை தீவிர படுத்துவோம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.