திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் தாலுகா மோட்டூர் கிராமம் நயம்பாடி பகுதியில்  வசிப்பவர் மனுநீதி (55). தொழிலாளியான இவர் கடந்த 2015 மார்ச் 19-ல் வாய்பேச முடியாத மற்றும் மனநலம்  குன்றிய 13 வயது சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு உறவினர்கள் வந்துள்ளனர். உடனே இதை பார்த்த மனுநீதி அவ்விடத்தில் இருந்து தப்பித்து ஓடினார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, மனுநீதியை கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை அம்மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.