இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் கடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதி சுற்றுக்குள் தகுதி பெற்ற நிலையில் உடல் எடை அதிகமாக இருந்ததால் அப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து  விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று அரசியலில் நுழைந்தார்.

இதனை அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக ஆனார். இந்நிலையில் அரியானா அரசு வினேஷ் போகத்துக்கு மாநில விளையாட்டுக் கொள்கையின் கீழ் மூன்று விருப்பங்களை வழங்கியுள்ளது. இதில் ரூபாய் 4 கோடி ரொக்க பரிசு, குரூப் ஏ பதவி அல்லது ஹரியானா நகரப் பகுதிகளில் வீட்டுமனை ஒதுக்கீடு.

இந்த முடிவு குறித்து அரியானா முதல்வர் சைனி கூறியதாவது,”வினேஷ் போகத் எம்.எல்.ஏவாக இருப்பதால், விளையாட்டு கொள்கையின் கீழ் அவருக்கு வழங்கப்படும் சலுகைகளில் எதை தேர்வு செய்ய விரும்புகிறார் என்ற முடிவை அவரிடமே விட்டுள்ளோம்” என தெரிவித்து இருந்தார்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது வினேஷ் இதுகுறித்த கேள்வி எழுப்பிய நிலையில் இன்று அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு தீர்வு காணும் வகையில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு வழங்கப்படும் மாநில அளவிலான நன்மைகளை வழங்க அரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.