மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகிய திரைப்படம் “தலைவி”. இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்தார். எம்ஜிஆர் ஆக அரவிந்த் சாமி நடித்தார். அதோடு சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை விப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விஷ்ணுவர்தன் இந்தூரி, ஷைலேஷ் ஆர் சிங் போன்றோர் தயாரித்தனர்.

சென்ற 2021-ஆம் வருடம் வெளியாகிய இந்த படத்தின் விநியோக உரிமையை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றது. இந்த நிலையில் தலைவி படத்தின் விநியோக உரிமைக்காக செலுத்திய முன் பணம் ரூ.6 கோடியை திருப்பித் தரும்மாறு, அந்நிறுவனம் படத் தயாரிப்பாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது. கடந்த ஒன்றரை ஆண்டாக கேட்டும் பதில் ஏதும் வராததால் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழக்குத் தொடர முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.