ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ, தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை மற்றும் தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு தேவையான  உதவிகள் வழங்கப்படும்.

மேலும் ஆதிதிராவிடர், பழங்குடி பிரிவினருக்கு வணிக போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, வாகனம் வாங்குவது போன்ற 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக 75 லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும். இதில் 25 % மானியம் மற்றும் கூடுதலாக 10 % அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி சேர்ந்து வழங்கப்படும்.

இத்திட்டத்தில் 5 % சொந்த முதலீடு நாம் செய்ய வேண்டும். இதற்கு வயது வரம்பாக 21 முதல் 45 வயது வரை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொழில் முனைவோர் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தினால் கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இதில் சேர விரும்பும் பயனாளிகள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பித்து பயன் அடையலாம். இதை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.