
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, பின்னால் இருந்து ஒருவர் அவரது செல்போனிலிருந்து நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜயின் போட்டோவை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசனிடம், இது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நானும் அந்த வீடியோவை பார்த்தேன். யார் வேண்டுமானாலும் எங்கள் பின்னால் வந்து நிற்கலாம் என்ற அளவிற்கு பாஜக சுதந்திரத்தை அனுமதிக்கிறது. ஆனால் இதுபோன்று வேறொரு கட்சியின் கூட்டத்தில் யாராவது செய்யும் முடியுமா?. எது பாசிசம், எது கருத்து சுதந்திரம் என்பதை இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.