தமிழகத்தில் வரும் ஏப்ரல் இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் தமிழகத்தின் மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.

இவரது பிரமாணப் பத்திரத்தின்படி 1041 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது கணவர் சாண்டியாகோ மார்ட்டின் சுமார் 3262 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளையும் 887 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளையும் கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக லீமா ரோஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு ஐந்தாயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லீமா ரோஸின் மகன் ஜோஸ் டைசன் மார்ட்டின் சுமார் 664 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ள நிலையில் புதுச்சேரியில் ஒரு அரசியல் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களான முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை விடப் பல மடங்கு அதிக சொத்துகளை லீமா ரோஸ் வைத்துள்ளார். உதாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் அளவிலேயே சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்குச் சொந்தமாக வாகனங்களோ அல்லது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளோ இல்லை என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மற்ற முக்கிய வேட்பாளர்களை விட லீமா ரோஸ் பல ஆயிரம் கோடி ரூபாய் முன்னிலையில் இருப்பது இந்தத் தேர்தல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் லட்சிய ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த லீமா ரோஸ் அக்கட்சியின் மகளிர் அணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் திமுகவின் கோட்டையாக விளங்கி வரும் லால்குடி தொகுதியில் இந்த முறை அதிமுக சார்பில் லீமா ரோஸ் களம் இறக்கப்பட்டுள்ளார். இங்கு திமுக சார்பில் பரிவாலல் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கு ப கிருஷ்ணன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இவ்வளவு பெரிய சொத்து மதிப்புடன் ஒரு வேட்பாளர் களம் காண்பது லால்குடி தொகுதியில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.