“காரைக்குடியில் சீமானுக்கு வீடும் கிடையாது, வாக்கும் கிடையாது; அவருக்கும் இந்தத் தொகுதிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை” என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்த நிலையில், அதற்கு சீமான் தனது பாணியில் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “உங்கள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டாரே, அவருக்கு அங்கே வீடும் வாக்கும் இருந்ததா? அங்கிருப்பவர்கள் இதுபோல் கேள்வி கேட்டார்களா?” எனச் சீமான் ஆவேசமாக வினவியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசும் நீங்கள், ஒரு இந்தியக் குடிமகன் எந்தத் தொகுதியிலும் போட்டியிடலாம் என்ற அடிப்படை உரிமையை மறக்கக் கூடாது எனச் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “என்னைத் தொகுதிக்கு வெளியே இருப்பவர் எனச் சொல்வதற்குப் பின்னால் இருக்கும் பயமும் நடுக்கமும் எனக்குப் புரிகிறது; அந்த நடுக்கம் அப்படியே இருக்கட்டும்” எனச் சீமான் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
