பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புகளில் இடம்பெறும் வேட்டி, சேலைகளில் அமைச்சர் காந்தி தொடர்ந்து ஊழல் செய்து வருவதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்ததும் முதலில் கைதாக போகும் திமுக அமைச்சர்கள் பட்டியலில் முதலில் அமைச்சர் காந்தி தான் இருப்பார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் வேட்டி, சேலைகளில் அமைச்சர் காந்தி தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார்.

வேட்டி சேலை நெசவு செய்ய பயன்படுத்தப்படும் பருத்தி நூலுக்கு பதிலாக பாலிஸ்டர் நூலை அதிகமாக வாங்கி வேட்டி, சேலை தயாரித்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக தமிழக பாஜக சார்பில் கோவையில் நடந்த ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து மக்களுக்கு வழங்கப்படும் வேட்டியில் 78% பாலிஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்பதை கண்டறிந்து உற்பத்தி செலவில் மிகப்பெரிய ஊழல் செய்ததை வெளிப்படுத்தினோம். இதுகுறித்து தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து குற்றச்சாட்டு தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தனர். அதற்கு இணங்க ஊழல் தொடர்பான விவரங்களை கண்காணிப்புத்துறை இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் இந்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்?. இதேபோல இந்த ஆண்டும் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் இலவச வேட்டியில் பருத்தி நூலின் அளவை குறைத்து பாலிஸ்டர் நூலை பயன்படுத்தி அமைச்சர் காந்தி ஊழல் செய்திருக்கிறார். ஏற்கனவே கடந்த டிசம்பர் 3, 2024 ஆம் ஆண்டு கைத்தறி இயக்குனரக துறையின் ஐஏஎஸ் அதிகாரி திரு சண்முகசுந்தரம் அவர்கள் தரப்பரிசோதனை தெரிவு செய்யப்பட்டு 20 லட்சம் வேட்டிகளை கூட்டுறவு சங்கங்களுக்கே திருப்பி அனுப்பி அதே எண்ணிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை கொள்முதல் கிடங்குக்கு அனுப்பி வைக்க குறிப்பானை அனுப்பி உள்ளார்.

மக்களின் பணத்தை கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் நூதன முறையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி ஐஏஎஸ் அதிகாரி திரு சண்முகசுந்தரம் அவர்கள் தடையாக இருப்பதை தெரிந்து இரண்டு நாட்களில் நேற்று அவரை கைத்தறி துறையில் இருந்து பணி மாற்றம் செய்திருக்கிறார்கள். கைத்தறி துறையில் நடக்கும் மெகா ஊழலை கடந்த ஆண்டு கண்டுபிடித்து கூறியும் முதலமைச்சர் காந்தியை தொடர்ந்து அதே துறையில் நீடிக்க செய்கிறார் என்றால் அமைச்சர் செய்யும் ஊழலில் முதலமைச்சருக்கும் பங்கு செல்கிறது என்பது தானே பொருள்? தனது பணியை சரியாக செய்து ஊழல் நடப்பதை வெளிக்கொண்டு வந்த அரசு அதிகாரியை இரண்டு நாட்களிலேயே பணி மாற்றம் செய்திருப்பது அதை தானே உறுதிப்படுத்துகிறது? இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?

ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி,  சேலைகளில் கொள்ளை அடிக்கும் அமைச்சர் காந்தி இனியும் கைத்தறி துறை அமைச்சராக நீடிக்க கூடாது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது சிறைக்கு செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில் அமைச்சர் காந்தி முதல் நபராக இருப்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்திருந்தார்.