கர்நாடக மாநிலதில் உள்ள பெங்களூருவை ஒட்டிய ஆனேகல் தாலுகாவின் சூரியநகர் பகுதியில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் பணியாற்றும் பெண் மேலாளர் ஒருவர், வாடிக்கையாளரிடம் “நான் கன்னடம் பேச மாட்டேன், இந்த வேலை நீ தான் குடுத்தியா?” எனக் கூறி, கன்னட மொழியை ஒதுக்கினார்.

“இது கர்நாடகா” என வாடிக்கையாளர் எச்சரித்தபோதும், மேலாளர் “இது இந்தியா” என பதிலளித்துக் கன்னடத்தில் பேச மறுத்ததோடு, “நான் ஹிந்தி மட்டுமே பேசுவேன்” என உறுதியாகக் கூறிய வீடியோ வைரலாக பரவியது. இது தொடர்பாக வாடிக்கையாளர், வங்கியின் மேலிடத்தில் புகார் செய்வதாக மேலாளரை எச்சரித்தார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மக்கள் மட்டுமன்றி, அரசியல்வாதிகளும் இதில் தலையிட்டனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது இணைய பக்கத்தில் “இது கண்டிக்கத்தக்க நடத்தை. எஸ்பிஐ மேலாளரின் செயல் மாநில மொழியை அவமதிப்பதாகும். வாடிக்கையாளர்களிடம் மரியாதை மற்றும் உள்ளூர் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” எனக் கடுமையாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, எஸ்பிஐ மேலாளர் வேறு கிளைக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டார்.

மேலும், சித்தராமையா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாகக் கேட்டு, இந்திய அளவில் அனைத்து வங்கித் தலைவர்களுக்கும் “மொழி மற்றும் கலாச்சார உணர்வுத் திறன் பயிற்சி” கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வாழும் மாநிலத்தின் மொழியில் சேவைகள் வழங்கும் சூழல் உருவாகும் என்றும் தெரிவித்தார். வங்கிக் கணக்குகளை இயக்கும் பொதுமக்களுக்கு இது முக்கிய அடையாள மரியாதையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, மேலாளர் தனது சக ஊழியர்களின் உதவியுடன் கன்னடத்தில் ஒரு மன்னிப்பு வீடியோ வெளியிட்டார். “யாரையும் காயப்படுத்தியிருந்தால், எனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் கன்னடத்தில் பேச முயற்சிக்கிறேன்” என்று கன்னடத்தில் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

இந்த மன்னிப்புக்கு பிறகு,  மக்களிடையே சற்று நிம்மதி ஏற்பட்டது. ஆனாலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் வங்கி நிறுவனங்கள் சீரான பயிற்சிகளையும், நியாமான முறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் தொடர்ந்து எழுந்து வருகிறது.