தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்த நிலையில் அந்த படம் திரையரங்குகளில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தற்போது தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது விஜய் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் நிலையில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் தளபதி 69 ஆகும். இந்த பட அறிவிப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் எச் வினோத் படத்தை இயக்குகிறார். அதன் பிறகு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 69 படம் அடுத்த வருடம் அதாவது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் விஜய் கையில் ஒரு தீபபந்தத்தை ஏந்தியவாறு இருக்கிறது. அதோடு இது ஜனநாயகத்தை காப்பதற்கான தீப்பந்தம் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதனால் விஜயின் கடைசி படம் அரசியல் கதை என்பது உறுதியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

இதனை கருத்தில் கொண்டு தான் 2025 ஆம் ஆண்டு தளபதி 69 படம் வெளியாகிறது என்றும் அது முழுக்க முழுக்க அரசியல் கதையாக அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசியலில் விஜய் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று கூறப்படும் நிலையில், அரசியல் கதையில் அவர் நடிப்பதும் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் தளபதி 69 படம் குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.