ஆப்கானிஸ்தானில் பயணித்த இந்திய சுற்றுலா பயணிக்கு தாலிபான் இராணுவத்திடமிருந்து எதிர்பாராத வகையில் நட்பான முறையில் வரவேற்பு கிடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வழக்கமான பாஸ்போர்ட் சரிபார்ப்பு நிலைமையில், தாலிபான் வீரர்கள் இந்தியரை கண்டதும், புன்னகையுடன் பாஸ்போர்ட் கூட பார்க்காமல் செல்ல அனுமதித்த காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த வீடியோவில், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் கேமரா அணிந்தபடி பயணித்த இந்தியர், ஆப்கானில் சோதனை சாவடியில் தாலிபான் வீரர்களால் நிறுத்தப்படுகிறார். அப்போது அவரிடம், “நீங்க எங்கிருந்து வந்தீங்க?” என கேட்டபோது, இந்தியாவிலிருந்து காபூலுக்குப் போவதாக அவர் பதிலளிக்கிறார்.

உடனே, புன்னகையுடன் தாலிபான் வீரர் கூறிய பதில், “இந்தியா, ஆப்கான் – அண்ணன் தம்பி! பாஸ்போர்ட் வேணாம், சோதனை தேவை இல்ல.” என நெஞ்சை நெகிழச் செய்யும் வகையில் இருந்தது. வீடியோவுடன், “அழகான நட்பு இதுதான்! இது தான் ஆப்கானிஸ்தான் தன் உண்மையான நண்பர்களை எப்படி நடத்துது” எனும் வார்த்தைகள் இணையத்தில் பரவி வருகிறது.

இது தொடர்பாக நெட்டிசன்கள், ” நட்புக்கும், மரியாதைக்கும் எல்லை கிடையாது”, “இதுதான் மனித நேயம் வெல்லும் தருணம்” என நேர்மையான நட்பு அரசியலை கடந்து விடும் என்பதை சொல்லும் விதமாக கமெண்டுகள் பதிவிட்டு வருகிறார்கள்.