திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வளையாம்பட்டு பகுதி மேம்பாலத்தையொட்டி சர்வீஸ் சாலை வழியாக ஏராளமான மாணவ, மாணவிகள் சைக்கிள்களிலும், நடந்தும் பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக கார் ஒன்று வந்துள்ளது. பின்னர் திடீரென அங்கிருந்த தடுப்புச்சுவரின் மீது மோதி, உடைத்துக்கொண்டு மறுபக்கம்  இருந்த, சாலையில் தாறுமாறாக ஓடியது. அந்த நேரத்தில் சைக்கிளில், அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விஜய் (12),  அவனது தம்பி சூர்யா (11) மற்றும் 8-ம் வகுப்பு மாணவன் ரபீக் (12) ஆகியோர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மூவர் மீது அந்த கார் பயங்கரமாக மோதியதில் மூவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இந்த கோர விபத்தை பார்த்த மற்ற மாணவர்கள் அலறி அடித்து ஓடிய நிலையில்,  அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு  அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போது விபத்தை ஏற்படுத்திய கார் மரத்தில் மோதி நின்றதில், காரினுள் இருந்த 7 கல்லுரி மாணவர்களும் தப்பித்து  ஓடிய போது, பொதுமக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. பின் இறந்த 3 பள்ளி மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வலியுறுத்தி, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அதிகாரிகள் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின், அம்மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.