தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் அண்ணா பேருந்து நிலையத்தின் முன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த  விழாவுக்கு நகரச் செயலாளர் மற்றும் நகரசபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை தாங்கி, 70 கிலோ கேக் வெட்டி, தொடர்ந்து பொதுமக்களுக்கு கேக் மற்றும் பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்.  இதில் கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் கோவில்பட்டியில் உள்ள பங்களா தெரு, ஸ்டாலின் காலனி, காந்தி நகர் ஆகிய 3 நகராட்சி பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஏற்கெனவே தொடங்கபட்டு செயல்பட்டு வரும் நிலையில், நேற்று முதல்-அமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு மேலும் 2 நகராட்சி  பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி புதுரோடு, பாரதி நகர் மேட்டு தெரு ஆகிய 2 நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இத்திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கா. கருணாநிதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுக்கு உணவை பரிமாறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.