
தேசியத் தலைநகரான டெல்லியில், சஃப்தர்ஜங் எங்க்ளேவ் பகுதியில் நின்றிருந்த ஹூண்டாய் கார் ஒன்று கண்ணு சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான இந்த திருட்டு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம் ஜூன் 21ஆம் தேதி காலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. காரின் உரிமையாளர் ரிஷப் சௌஹான் என்ற இளைஞர் இந்தக் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இந்த கார் குறித்த எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “வீட்டின் வெளியே நின்ற என் புதிய ஹூண்டாய் கிரெட்டா காரை சில வினாடிகளில் திருடிவிட்டனர். ஹூண்டாய் நிறுவனத்தை நம்ப வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
சிசிடிவி காட்சியில் முதலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்த ஒருவர் முகக்கவசம் அணிந்து கீழே இறங்கி கையிலிருந்த பொருளை பயன்படுத்தி ஹூண்டாய் கிரெட்டா கார் ஜன்னலை உடைத்துவிட்டு, அந்த இடத்தை விட்டு சென்றார்.
சில விநாடிகளுக்குள் அதே கார் மீண்டும் வந்து நிற்க, மற்றொரு முகக்கவச அணிந்த நபர் காரில் இருந்து இறங்கி, கிரெட்டாவின் பாதுகாப்பு அமைப்பை ஒரு எலெக்ட்ரானிக் கருவியின் உதவியுடன் ஹேக் செய்து, திறந்து, மிக வேகமாக சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த காரை வெறும் ஆறுமாதங்களுக்குள் திருடப்பட்டதாக ரிஷப் கூறியுள்ளார். மேலும், போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம், புதிய கார்கள் மற்றும் அதில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய நம்பிக்கையை மிகவும் பாதித்துள்ளது. பொதுமக்கள், இந்த வகையான வாகன திருட்டுகளிலிருந்து எப்படி பாதுகாப்பது என்ற கோணத்தில் போலீசாரும், வாகன உற்பத்தியாளர்களும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.