குஜராத் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்தவர் பர்மால் அஹிர்(40). இவர் சோம்நாத் நகரிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேருந்தை எடுத்துள்ளார். அந்த பேருந்திலுள்ள பயணிகள் அனைவரையும் ராதன்பூர் நகர் வரை சென்று இறக்கிவிட வேண்டும். இதற்கென நேற்று காலை 7.05 மணியளவில் இலக்கை சென்றடைய வேண்டும். இருப்பினும் ராதன்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவுக்கு முன்பு வராஹி எனும் பகுதியில் நேற்று காலை டீ சாப்பிடுவதற்காக சாலையோரம் டிரைவர் அஹிர் பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் பேருந்து புறப்பட்டது. இந்நிலையில்திடீரென்று அஹிருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வேறெங்கும் நிற்காமல் வண்டியை தொடர்ந்து இயக்கி உள்ளார். பேருந்து டெப்போவுக்கு 15 நிமிடம் காலதாமதத்துடன் வந்து சேர்ந்தது. ஆனால் டிரைவர் அஹிர் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிவிட்ட பிறகு, சீட்டிலேயே சரிந்துள்ளார். அதன்பின் கண்டக்டர் மற்றும் மற்றவர்கள் சேர்ந்து ராதன்பூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அவரை கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பேருந்து டிரைவர் அஹிர் தன்னை பற்றி கவலைக்கொள்ளாமல் பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சென்று இறக்கி விட்டுவிட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.