கேரளா மாநிலம் குட்டியட்டூா் பகுதியை சோ்ந்தவா்கள் பிரிஜித்(35)-ரீஷா (26) தம்பதியினர். இதில் நிறைமாத கா்ப்பிணியாக இருந்த ரீஷாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதனால் ரீஷாவை கண்ணூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரிஜித் காரில் அழைத்துச் சென்றாா். அப்போது ஒரு குழந்தை உட்பட மேலும் 4 போ் உடன் சென்றனா். இதற்கிடையில் மருத்துவமனை அருகில் சென்றபோது காரின் முன் பகுதி திடீரென தீப்பிடித்தது.

அதன்பின் காரின் பின் இருக்கையில் இருந்தவா்கள் பதறியடித்து வெளியேறினா். எனினும் முன்னிருக்கைகளில் இருந்த பிரிஜித்தும், ரீஷாவும் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கி தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப்படையினா், தீயை முழுமையாக அணைத்தனா். இருப்பினும் பிரிஜித்தும் ரீஷாவும் உடல் கருகி ஏற்கெனவே இறந்துவிட்டனர். காா் தீப்பிடித்ததற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல் ஆணையா் அஜித்குமாா் தெரிவித்தாா்.