ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. தற்போதும் அந்த கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிட விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஜி.கே.வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, அ.தி.மு.க போட்டியிடும் என்ற முடிவை தாங்கள் ஏற்பதாகவும், கூட்டணி தர்மத்தை மதித்து தாங்கள் முழு ஆதரவையும் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க களமிறங்குவது உறுதியாகி விட்டது.
இதனை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தங்களுடன் இணைந்திருந்த கூட்டணிக் கட்சியினரை சந்தித்து இடைத் தேர்தலுக்காக நேரில் ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன்படி பாமகவும் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அதிமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என்று அக்கட்சி வெளிப்படையாக அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளது. அதோடு ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கவில்லை எனவும் பா.ம.க கூறியுள்ளது..