பிரதம் என்னும் கல்வி அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து வருடம் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது  கல்வி நிலை குறித்த ஆண்டு அறிக்கை என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 -ஆம் வருடத்திற்கான ஏஸர் கல்வி அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் உள்ள 616 கிராமப்புற மாவட்டங்களில் 6.9 லட்சம் மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரத்து 737 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட பின் தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் சேர்க்கை 99.8% அதிகரித்துள்ளது. இந்நிலையில்  தமிழக கிராமப்புறங்களில் எட்டாம் வகுப்பில் 37 %, ஐந்தாம் வகுப்பில் 75 %, மூன்றாம் வகுப்பில் 95% மாணவர்கள் இரண்டாம் வகுப்பு புத்தகங்களை படிக்க இயலாதவர்களாக உள்ளனர். மேலும் அடிப்படை கணிதத்தை பொருத்தமட்டில் ஐந்தாம் வகுப்பில் 85 % பேரும், எட்டாம் வகுப்பில் 55 % மாணவர்களாலும் வகுத்தல் கணக்குகளை சரியாக செய்ய முடியவில்லை.

அதேபோல் ஆங்கிலம் வாசிப்பு திறனிலும் தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். இது மட்டுமல்லாமல் 2018ல்  91.1% இருந்த பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 88.8 % குறைந்துள்ளது. தமிழகத்தில் மதிய உணவு திட்டம் 99.6 % மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறது. அதேபோல் 9.2% பேருக்கு குடிநீர் வசதியும், 1.2% பேருக்கு கழிப்பறை வசதியும் இல்லை. மேலும் 20 % பள்ளிகளில் நூலக வசதி இல்லாததும், 56% கிராமப்புற மாணவர்களுக்கு கணினி வசதி பள்ளிகளில் இல்லாததும் அந்த அறிக்கையின் மூலமாக தெரியவந்துள்ளது.