
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் பொங்கல் தைப்பூசம் ஆகிய விழாக்களை முன்னிட்டு மாலை அணிவித்த பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என பக்தர்கள் உணவு தண்ணீர் போன்ற அடிப்படை வசதி கூட இன்றி அடைத்து வைக்கப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. குறித்து பக்தர்கள் சிலர் புகார் தெரிவித்த போது அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு “திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்”என ஒருமையில் பதிலளித்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் அவர் கூறியதாவது, நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை, உணவு, தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தபோது, “திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்” என்று ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு. திருப்பதி கோவிலில் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய வசதிகள் செய்திருக்கிறார்கள்.
உங்களைப் போல, கோவில் உண்டியல் பணத்தை முறைகேடாகச் செலவழிப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் நேர்மையான உழைப்பில் கிடைக்கும் பணத்தில் சிறு பகுதியை, கோவில்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் பிரசாதத்தில் கமிஷன் அடிப்பதில்லை. கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதை விட அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம், காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்துகிறேன். காலம் மாறும். தனது ஒவ்வொரு தவறுக்கும், அமைச்சர் சேகர்பாபு, ஆண்டவனுக்கும், பொதுமக்களுக்கும் பதில் சொல்லத் தயாராக இருந்து கொள்ளட்டும்.