
ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியில் அமைந்துள்ள லால் மசூதியில் மதகுரு அப்துல் அஜீஸ் என்பவரின் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் மதகுரு அப்துல் அஜீஸ் ஒரு கேள்வியை கேட்டார். அதாவது பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக போராடினால் எத்தனை பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுப்பீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த கூட்டத்தில் இருந்த அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் யாருமே பதில் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து பேசிய அவர் பாகிஸ்தானில் மோசமான நிலைமை காணப்படுகிறது. இங்கே ஒரு கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது. இது இந்தியாவை விட மிகவும் மோசமானது என்றே விமர்சித்தார்.
பின்னர் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்கவாவில் ஏற்பட்ட பிரச்சனையின் போது பாகிஸ்தான் அரசானது அப்பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை வைத்து பார்க்கும் போது சொந்த குடிமக்களை தாக்கும் இந்த அரசின் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது என்று கூறினார். மேலும் இவர் பேசியது வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இந்தியாவில் வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.