மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம் இப்போது சமூக வலைதளங்களில் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியுள்ளது. அந்த நிறுவனம் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி படித்த பட்டதாரிகளைத் தேர்வு செய்யும்போது, ஒரு அதிரடி நிபந்தனையை விதித்துள்ளது.

அதாவது, சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டிலோ அல்லது விடுதியிலோ (PG) தங்கிப் படிப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதுதான் அந்த நிபந்தனை.

“மும்பையில் சொந்த வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை” என அந்த நிறுவனம் பிடிவாதம் காட்டுவது வேலை தேடும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தைப் பலரும் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “வாடகை கொடுக்கத் தேவையில்லை என்பதால், உள்ளூர் இளைஞர்களுக்குக் குறைந்த சம்பளம் கொடுக்கவே நிறுவனம் இப்படிச் செய்கிறது” என நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், ஒருவரது வசிப்பிடத்தை வைத்து வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டுவது இந்திய அரசியல் சாசனத்தின் 16-வது பிரிவுக்கு எதிரானது என்றும், இதனால் அந்த நிறுவனம் சட்டச் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

மும்பையில் ஏற்கனவே “உள்ளூர்வாசிகளுக்கே முன்னுரிமை” என்ற பேச்சு இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.