ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருகிறார்கள். திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணத்தை செலுத்துகிறார்கள். இந்நிலையில் திருமலையில் பரகாமனி மண்டபத்தில் உள்ள உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 12 உண்டியல்களை எண்ணும்  பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரவிக்குமார் என்ற ஒப்பந்த ஊழியர் திடீரென அங்கிருந்து எழுந்து சென்றுள்ளார். இதனால் ரவிக்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை சோதனை செய்த போது 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை அவர் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த பிறகு விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் ரவிக்குமாரை ஒப்படைத்தனர். அதன் பிறகு போலீசார் ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் திருப்பதி பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.