
மும்பையில் செயல்படும் “Naturally Yours” நிறுவனத்தின் CEO விநோத் செந்தில், ஒரு முதுநிலை பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர், தனது கணவரை நேரில் சந்திக்குமாறு கேட்டதால் உடனடியாக நிராகரிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், அவர், “ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வேலை ஏற்கும் முன்பு தனது கணவனை சந்திக்குமாறு கேட்டார். உடனடி நிராகரிப்பு” என பதிவிட்டார்.
மேலும், அந்த பெண் வேட்பாளர் தனது கணவர் நிறுவனத்திற்கே நேரடியாக நேர்காணல் நடத்த வேண்டும் என்று கூறியதாகவும், இது ஒரு முக்கிய எச்சரிக்கை சிக்னலாக பார்க்கப்பட்டது என்றும் விளக்கினார். தனியாக முடிவெடுக்க முடியாதவர் என்பதால், அவரை முதுநிலைப் பதவிக்கு தகுதியானவர் அல்ல என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள் வெளிப்பட்டன. சிலர் விநோத் செந்திலின் முடிவை ஆதரித்து, முதன்மை முடிவுகளை எடுக்க இயலாத ஒருவர், உயர்மட்ட பதவிக்காகத் தேர்வாகக் கூடாது என்றனர். அதே நேரத்தில், சிலர் இந்த முடிவுக்கு எதிராக, பல பெண்கள் குடும்ப கட்டுப்பாட்டின் காரணமாகவே இவ்வாறு செயல்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டனர்.
இதற்கு பதிலளித்த விநோத் செந்தில், மூன்று மணி நேர நேர்காணலில் வேறு சில பெரிய கோளாறுகளும் இருந்ததாக விளக்கம் அளித்தார். இது ஒரு நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு என்றும், அந்த ஒரு காரணத்தினால் மட்டும் அவர் நிராகரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். பெண்கள் தன்னம்பிக்கையுடன் முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்பதால், ஒரு கணவரின் அனுமதி வேலைக்கு தேவையில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.