மும்பையை அடுத்த குர்லா மேற்குப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்ததில், 33 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 17 வயதுச் சிறுவன் கொடுத்த மிரட்டலால்  பயந்து அவர் குதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து வினோபா பாவே நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அக்டோபர் 9-ஆம் தேதி மதியம் 1.25 மணியளவில் கீரல் சாலையில் உள்ள கட்டிட எண் 9-ல் இருந்து ஒருவர் குதித்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் விபத்து மரண அறிக்கையாக இது பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்தபோது, உயிரிழந்த நபர் ஒரு டேட்டிங் செயலி மூலம் அந்தச் சிறுவனால் பணத்துக்காக மற்றொரு நபரைச் சந்திப்பதாகக் கூறி வசீகரித்து வரவழைக்கப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது. அங்கு வந்த அந்தச் சிறுவன் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து, அந்த நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை அம்பலப்படுத்தி விடுவதாக மிரட்டியதோடு, உடைந்த பாட்டிலைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார்.

இதனால் பீதியடைந்த அந்த நபர், அங்கிருந்து தப்பிப்பதற்காகத் திறந்திருந்த படுக்கையறை ஜன்னல் வழியாகக் கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் இந்திய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ், தற்கொலைக்குத் தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 17 வயதுச் சிறுவன் என்பதால், அவர் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் சட்டத்தில் மோதல் கொண்ட குழந்தை என்று கருதப்பட்டு, மற்ற இரண்டு இளைஞர்களுடன் சேர்த்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.