கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயக தின கொண்டாட்டத்தின் போது, காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை நோக்கி பாதுகாப்பை மீறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவில் விதான் சவுதா முன்பாக நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் மகாதேவப்பா மேடையில் பேசி கொண்டிருந்த நேரத்தில், கூட்டத்தில் அமர்ந்திருந்த மகாதேவ் நாயக் என்ற நபர் திடீரென மேடையை நோக்கி ஓடினார்.

முதல்வர் சித்தராமையா மேடையில் அமர்ந்திருந்தபோது, நாயக் அவரை நோக்கி  ஓடினார். பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக அவர் மீது கவனம் செலுத்தி, அதிரடியாக தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் ஒரு சில நொடிகள் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில் மகாதேவ் நாயக் முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது.  மேலும் முதல்வருக்கு சால்வை அணிவதற்காகத்தான் மேடைக்கு தான் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.