திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதோடு திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் மத்திய அரசை கண்டிக்கப் போவதில்லை. தேர்தல் நெருங்குவதால் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். பின்னர் பிரதமர் மோடியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டபூர்வமாக நமக்கு வரவேண்டிய கல்வி உதவித்தொகை வர வேண்டும். அதை நிறுத்தி வைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறினார்.
பின்னர் கிராமத்தில் உள்ள டீக்கடை, பொட்டிக்கடை அனைத்திற்கும் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று திமுக அரசு கூறுகிறது என்று எடப்பாடி கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் திமுக அரசு லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று கூறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வராகவில்லை. அதனால் அவருக்கு இது பெரிய வாய்ப்பு இல்லை.
கடந்த 1958க்கு முன் வரை சாதாரண டீக்கடைகளுக்கு லைசன்ஸ் கிடையாது. ஆனால் அதன் பின்பு இந்த சட்டம் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பஞ்சாயத்து யூனியனில் வசூல் செய்து கொண்டுதான் இருந்தார்கள். எடப்பாடிக்கு பஞ்சாயத்து யூனியன் சட்டம் பற்றி தெரியவில்லை. 3 லட்சத்து 45 ஆயிரம் நபர்கள் கடந்த 1958 இல் இருந்து லைசென்ஸ் வாங்கி பணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் ஆண்டிற்கு 24 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. அவர் ஆட்சி காலத்தில் இருந்தது தான். புதிதாக நாங்கள் எந்த வரியும் போடவில்லை. வியாபார உரிமம் என டீக்கடைக்கு ரூபாய் 250 கட்டினால் மூன்று வருடத்திற்கு அதனை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
