
கோவையில் துடியலூர் அருகே உள்ள பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அதிகாலையில் தடாகம் சாலையில் நடை பயிற்சி செய்வது வழக்கம். அதேபோன்று நேற்றும் நடராஜ் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து உணவை தேடி தடாகம் சாலைக்கு வந்த காட்டு யானை நடை பயிற்சி செய்து கொண்டிருந்த நடராஜனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கோரி மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர் ஜி அருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து நடராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பின் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.