இந்தியாவில் நடுத்தர வர்க்கம் எப்போதும் “முன்னேற்றத்தின் முகமாக” காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் அவர்கள் ஒரு அமைதியான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கின்றனர். வாடகை, பள்ளிக் கட்டணம், மருத்துவ செலவுகள், உணவுப் பொருட்கள் என எல்லாம் ஏறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் சம்பளம் அதே இடத்தில் உறைந்து கிடக்கிறது. இதில் மோசமானது என்னவென்றால், இது மிகச் சிறிய அளவில் பேசப்படுகின்ற பிரச்சனை. இதை நேரடியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் பெங்களூருவை சேர்ந்த நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அசீஷ் சிங்கால்.

அவர் தனது LinkedIn பதிவில், “இந்திய நடுத்தர வர்க்க சம்பளங்கள், இது பேசப்படாத பெரிய மோசடி” என்று எழுதினார். கடந்த 10 ஆண்டுகளில் ₹5 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான வருட வருமானம் பெறும் இந்தியர்கள் பொதுவாக நடுத்தர வர்க்கம் என்று வகைப்படுத்தப்படுவோர் ஆண்டிற்கு சராசரியாக வெறும் 0.4% மட்டுமே சம்பள உயர்வைப் பெற்றுள்ளனர் என புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளார்.

இதே சமயம், உணவுப் பொருட்களின் விலை 80% வரை உயர்ந்துள்ளது. இணையத்தில் புகைப்படங்கள், புதிய போன்கள், விடுமுறை பயணங்கள் மூலம் வாழ்கை செழிப்பாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் அதன் பின்னணியில், மருத்துவ செலவுகள் தள்ளிப் போகின்றன, சேமிப்புகள் இல்லாமல் கடனில் வாழ்க்கை ஓடுகிறது.

EMI, கிரெடிட் கார்டு செலவுகள் அதிகரிக்கின்றன, ஆனால் உண்மையான சம்பள வளர்ச்சி நிலைத்திருக்கிறது. ஆய்வுகளின்படி, 2021-ல் நடுத்தர வர்க்கம் மக்கள் தொகையில் 31% இருந்த நிலையில், 2031-ல் அது 38%-க்கு, 2047-ல் 60%-க்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சியில்லா சம்பள நிலை, உண்மையான நிதி பாதுகாப்பை தராமல் இருக்கிறது.

“நடுத்தர வர்க்கம் வெறும் வாக்கு வங்கி அல்ல, அது நாட்டின் பொருளாதார இயக்க சக்தி”. ஆனால் அந்த இயந்திரமே தற்போது தடுமாறி வருகின்றது. அரசு உதவித் திட்டங்கள் மூலம் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர். முதலீடுகளின் மூலம் பணக்காரர்கள் செழிக்கின்றனர். ஆனால் நடுத்தர வர்க்கம் மட்டும் எப்போதும் உதிரப் பலியாக்கப்படுகிறது.

விலை உயர்வுகள், கட்டண உயர்வுகள் ஆகியவற்றை யாரும் பார்த்துக்கொள்ளவில்லை. இதன் விளைவாக, வெளியிலே பளிச்சென தெரியும் வாழ்க்கையின் உள்ளே ஒரு நிரந்தரமான நிதி மன அழுத்தம் மறைந்திருக்கிறது. “நடுத்தர வர்க்கம் எல்லாவற்றையும் ஏற்கவேண்டும் என்பதே ஒழுங்கு போல ஆகிவிட்டது” என்கிறார் சிங்கால்.