தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகித்யால் மாவட்டத்தில் உள்ள கொடிமியாலா மண்டல பகுதியை ச் சேர்ந்தவர் அவதுர்த்தி மகேந்தர் இவருக்கும், கரீம் நகர் மாவட்டம் மல்லபூரை சேர்ந்த மம்தா (35) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் மகேந்தர் மதுவுக்கு அடிமையாகி, கடனிலும் சிக்கியிருந்தார். இதனால் தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமை செய்ததாகவும், தனக்கு குழந்தைகள் இல்லை எனக் கூறி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மகேந்தருடன் சேர்ந்த அவரது தாயார் வஜ்ரவா, தந்தை லட்சுமணன், தம்பிகள் அனில் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரும் சேர்ந்து மம்தாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி மகேந்தர் தனது மனைவி மம்தாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது கழுத்தில் ஒரு நைலான் கயிற்றைக் கட்டி இறுக்கி கொலை செய்துள்ளார்.

அதன் பின் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக அனைவரையும்  நம்ப வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மம்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் மகேந்திர தான் அவரது மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை மகேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மகேந்தரின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.