டெல்லி சதர் பஜாரில் ஒரு பெண் ஆசிரியரின் ஒருதலைக் காதல், பயங்கர சதியாக மாறிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 22 வயது பெண் ஆசிரியர், தனது பள்ளியின் முதல்வரை (பெண்) காதலித்தார். ஆனால், அந்தக் காதல் ஏற்கப்படவில்லை. முதல்வரை ஈர்க்க, அவர் முதலில் உணர்ச்சிகரமான நாடகம் ஆடினார்.

தனக்கு புற்றுநோய் என்று பள்ளியில் வதந்தி பரப்பி, வீடியோ ஒன்றை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுப்பினார். முதல்வர் பதிலளிக்காததால், தனது மரணத்தைப் பற்றிய போலி செய்தியைப் பரப்பி, தனது புகைப்படத்தில் மாலை அணிவித்து வைரலாக்கினார். ஆனால், இவையெல்லாம் தோல்வியடையவே, அவர் மேலும் ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

முதல்வரின் அரவணைப்பைப் பெற முடியாத விரக்தியில், அந்த பெண் ஆசிரியர் முதல்வருக்கு நெருக்கமான மற்றொரு ஆசிரியையை இலக்காக்கினார். AI கருவிகளைப் பயன்படுத்தி அந்த ஆசிரியையின் அசிங்கமான புகைப்படங்களை உருவாக்கி, அவரது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுப்பி அவமானப்படுத்தினார்.

இதை அறிந்த முதல்வர் காவல்துறையில் புகார் அளிக்க, வடக்கு டெல்லி டிசிபி ராஜா பந்தியாவின் மேற்பார்வையில் விசாரணை தொடங்கியது. ஐபி லாக்ஸ், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்கள் மூலம் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை, அவரை புதன்கிழமை கைது செய்தது.

அவரிடமிருந்து மர்மமான குறியீடுகள், எண்கள் மற்றும் முதல்வரின் பெயர் பொறிக்கப்பட்ட மூன்று புரியாத துண்டு தாள்0கள் கைப்பற்றப்பட்டன, இவை சூனிய சடங்குகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.