நாகலாந்து, மேகலாயா மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடையை இருப்பதால் தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. பதிவான வாக்குகள் வருகின்ற மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

திரிபுராவில் 2018 ஆம் வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 25 வருட கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை தோற்கடித்து பாஜக முதல்முறையாக ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் தற்போது இந்த தேர்தலிலும் வெற்றி பெறும் முனைப்பில் அம்மாநில முதல் அமைச்சர் மாணிக் சாக தேர்தல் பரப்புரையில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் ஆளும் கட்சியான பாஜகவை தோற்கடிக்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழைய ஓய்வூதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கின்றது.

திரிபுராவில் 1.04 லட்சம் அரசு ஊழியர்களும் 80 ஆயிரம் அரசு ஓய்வூதியதாரர்களும் இருக்கின்றார்கள். இதனை கருத்தில் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் வாக்குறுதியில் தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்திருக்கின்றது. அண்மை காலமாகவே பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் என்ற தேர்தல் வாக்குறுதி அதிகம் முன் வைக்கப்படுகின்றது.

இமாச்சல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என கூறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால், இந்த யுக்தியை இடதுசாரிகளும் தற்போது கையிலெடுத்துள்ளார்கள். தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டங்கள் அமலில் இருக்கின்றது. மேலும் பாஜக கூட்டணியான ஏக்நாத் ஷிண்டே அரசும் மகாராஷ்டிராவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பரிசீலனை செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.