நாகப்பட்டினம் மாவட்டம் திருமுருகன் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி சோமநாதர் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பண்டாரவடை பாசன வாய்க்காலின் குறுக்கே தரைபாலம் ஒன்று அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் பல்வேறு தேவைகளுக்காக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தரைப்பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் தடுப்பு சுவர் இல்லாமல் இருப்பதால் பள்ளி மாணவ, மாணவர்கள் பாதை தெரியாமல் வாய்க்காலில் தவறி விழுந்து விடுகின்றனர்.

மேலும் 250 ஏக்கருக்கு மேல் சாகுபடி நிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாகவும் இருக்கின்ற காரணத்தினால் தண்ணீர் போதிய அளவு கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தரைப் பாலத்தை அகற்றிவிட்டு புதிய தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.