மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, காலையில் எழுந்தால் கலைஞருடைய வீட்டுக்கு செல்வேன். நண்பகலிலே அவரை இல்லத்திலே விட்டுவிட்டு நான் திரும்ப என்னுடைய வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு,  திரும்ப நான் செல்வேன்.  திரும்ப கலைஞர் அவர்களை அழைத்துக்கொண்டு அறிவாலயத்துக்கு சென்று,  முரசொலி அலுவலகத்திலேயே விட்டுவிட்டு திரும்ப வீட்டுக்கு போய் விட்டுவிட்டு,  நான் பழையபடி என்னுடைய வீட்டுக்கு வந்து சேருவேன்.

ஒரு நாள் என் வீட்டிலேயே கேட்டார்கள்.  நீங்கள் அங்கேயே ஒரு அரை எடுத்து தங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் ஏன் வீட்டுக்கு வருகிறீர்கள் என்று கேட்டார்கள் ? சிரித்துக் கொண்டே கேட்டார்கள்…  அப்படி ஒரு பாச உணர்வோடு, என்னுடைய வாழ்க்கையிலே சம்பவங்களில் இதையெல்லாம் மறக்க முடியாத சம்பவங்கள். அதன் பிறகு இதே மதுரையில் முரசொலி அலுவலகம் தொடங்கப்பட்ட நாளில் நான் பேசிய பேச்சை இன்றைக்கும் மறக்க மாட்டார்கள்.

முரசொலி இளைஞர் அணியை தொடங்கி வைக்கின்ற போது நான் பேசினேன். நான் கலைஞருக்கு சொன்னேன். என்னை நானே அழித்துக் கொள்வேன், என்னுடைய உடல் ஓய்ந்து,  உயிர் சாய்ந்தாலும் நான் உதயசூரியனை வெற்றி பெற வைக்காமல் நான் போக மாட்டேன் என்று நீங்கள் எழுதி  இருக்கிறீர்களே… இப்படி எழுதலாமா ? அதற்கு முன்பு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் சொன்னார்.

இப்படி நீங்கள் எழுதியிருக்க வேண்டாம் என்று…. நான் சொன்னேன் நீங்கள் ஏன் இப்படி எழுதினீர்கள் ? உங்களுக்கு பின்னால் எத்தனை லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஒரு கட்டபொம்மன் போனால்  அங்கே ஊமைத்துரை  இருக்கிறான். அதேபோன்று லட்சக்கணக்கான ஊமைத்துரைகள் இருக்கிறார்கள். துரியோதனன் துரோகம் செய்தால் அங்கே கும்பகர்ணன்  இருக்கிறான். ஆயிரக்கணக்கான கும்பகர்ணன் இருக்கின்றார்கள். என் போன்றவன் எல்லாம் அப்படித்தான் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னேன். காலம் வேகமாக மாறியது என தெரிவித்தார்.