திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது அவர், “மாஸா, கெத்தா இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ள டிராவிடியன் ஸ்டாக்ஸ் அனைவருக்கும் நன்றி” என்று கூறி உரையைத் தொடங்கினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த இளைஞர்களைப் பார்த்ததும், 50 ஆண்டுகள் பின்னால் சென்றது போல உணர்வதாகக் கூறிய ஸ்டாலின், அவர்களின் எனர்ஜி தனக்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞராக இருந்தபோது, திமுக இளைஞரணியை வளர்க்கத் தமிழகம் முழுவதும் பயணம் செய்ததையும், கிராமம் கிராமமாகத் திண்ணைப் பிரச்சாரம் செய்து திமுகவை வளர்த்தெடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். புது ரத்தம்போல இளைஞர்கள் இயக்கத்திற்கு வந்திருப்பதாக அவர் பெருமிதம் கொண்டார்.