கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் கே.கே நகரில் கந்தவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூரில் இருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் ஓட்டி வருகிறார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கந்தவேலுக்கு மடுக்கரையை சேர்ந்த ஊர்காவல் படை பெண் ஊழியரான பாரதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பாரதி ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல் மனைவிக்கு தெரியாமல் கந்தவேல் பாரதியை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

இதுபற்றி அறிந்த சோலையம்மாள் தனது கணவரை தட்டி கேட்டுள்ளார். அப்போது கந்தவேல் அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சோலையம்மாள் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கந்தவேலை கைது செய்தனர். இதனையடுத்து தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் குமார் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கந்தவேலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.