ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு சத்விகா நாகஸ்ரீ (11) என்ற மாணவி, ஆசிரியரால் தாக்கப்பட்டு மண்டை எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், மாணவி வகுப்பறையில் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, இந்தி ஆசிரியர் அவரது தலையில் பள்ளிப் பையால் தாக்கியதாகத் தெரிகிறது.
இதனால், மாணவிக்கு தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு, மூன்று நாட்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. முதலில் இதை சாதாரண தண்டனையாக எண்ணிய மாணவியின் தாய் விஜேதா, பின்னர் மகளின் உடல்நிலை மோசமடையவே, புங்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
అల్లరి చేస్తోందని విద్యార్థిని తలపై కొట్టిన టీచర్.. విరిగిన పుర్రె ఎముక
చిత్తూరు జిల్లా పుంగనూరులోని ఓ ప్రైవేట్ స్కూల్లో ఆరో తరగతి చదువుతున్న నాగశ్రీ(11)ని ఈ నెల 10న స్కూల్ బ్యాగ్తో కొట్టిన ఓ టీచర్
తలనొప్పిగా ఉండటంతో పేరెంట్స్ ఆమెను ఆసుపత్రికి తీసుకెళ్లగా పుర్రె ఎముక… pic.twitter.com/t2voxWfYvo
— Telugu Scribe (@TeluguScribe) September 16, 2025
அங்கு முதல்கட்ட பரிசோதனையில் மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பது தெரியவந்ததால், மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு மாற்றப்பட்டார்.
பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட விரிவான பரிசோதனைகளில், ஆசிரியரின் தாக்குதலால் மாணவிக்கு மண்டை எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து, மாணவியின் தாய் மற்றும் குடும்பத்தினர் திங்கட்கிழமை மாலை பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மாணவர் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
