கடந்த சில தினங்களாக தமிழகத்திலுள்ள வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சோஷியல் மீடியாவில் போலி செய்தி பரவியது. இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக உத்தரபிரதேசம் பாஜக தலைவர் தன் டுவிட்டர் பக்கத்தில் போலி செய்தியை பகிர்ந்துள்ளார். பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் உள்ள புகைப்படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த உத்தரபிரதேச பாஜக செய்தித்தொடர்பாளரான பிரசாந்த் உம்ராவ், இந்தியில் பேசியதற்காக தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த 12 புலம்பெயர் தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக டுவிட் செய்து உள்ளார்.